கர்நாடக மாநிலம் உள்பட இந்தியாவின் சில பகுதிகளை முன்னர் ஆட்சிசெய்த திப்பு சுல்தான், ஹைதர் அலி ஆகிய மன்னர்கள் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து போரிட்ட காலத்தில் பீரங்கிகளையும், ராக்கெட்களையும் பயன்படுத்தியதாக வரலாற்று குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன.இவர்களில் திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் முந்தைய மைசூரு மாவட்டத்துக்குட்பட்ட நாகாரா பகுதியில் பணம் அச்சிடும் தங்கசாலையும், போருக்கு தேவையான ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் இயங்கி வந்துள்ளன.
இந்நிலையில், தற்போது ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோசாமகாரா தாலுக்கா, நகாரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கிணற்றை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தூர்வாரியபோது ஏழு முதல் பத்தடி நீளத்தில் ராக்கெட் வடிவில் சில துருபிடித்த இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.வெடிமருந்து நிரப்பப்பட்ட இந்த பொருட்களை 18-ம் நூற்றாண்டு காலத்தில் ஆட்சிசெய்த மன்னர் திப்பு சுல்தான் போராயுதமாக பயன்படுத்தி இருக்கலாம் என கருதிய கிணற்றுக்கு சொந்தக்காரர் அவற்றை தொல்லியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அவர்கள் நடத்திய பரிசோதனையில் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட 102 ராக்கெட்டுகளும் மன்னர் திப்பு சுல்தான் காலத்தை சேர்ந்தவை என்றும், மைசூரு சாம்ராஜ்ஜியம் மற்றும் ஆங்கிலேயப் படைகளுக்கு இடையில் நான்காவது யுத்தம் நடைபெற்றபோது மேற்படி ராக்கெட்டுகள் எதிரிகளின் கையில் சிக்காமல் இருப்பதற்காக அவற்றை கிணற்றில் போட்டு மறைத்து வைத்திருக்கலாம் என்றும் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.